| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.55 திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம் | 
| வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
 ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
 ஓவாத சத்தத் தொலியே போற்றி
 ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
 ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
 காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 1 | 
| பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி
 வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
 மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
 பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
 போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
 கச்சாக நாக மசைத்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 2 | 
| மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
 உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
 உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
 திருவாகி நின்ற திறமே போற்றி
 தேசம் பரவப் படுவாய் போற்றி
 கருவாகி யோடு முகிலே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 3 | 
| வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
 ஊனத்தை நீக்கு முடலே போற்றி
 ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
 தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
 தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
 கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 4 | 
| ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
 பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
 பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
 நீராவி யான நிழலே போற்றி
 நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
 காராகி நின்ற முகிலே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 5 | 
| சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றி
 புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
 போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
 பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
 பற்றி உலகை விடாதாய் போற்றி
 கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 6 | 
| பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
 எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
 என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
 விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
 மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
 கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 7 | 
| இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
 உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
 ஊழியே ழான ஒருவா போற்றி
 அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
 ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
 கமையாகி நின்ற கனலே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 8 | 
| மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
 தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
 சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
 ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
 அல்லல் நலிய அலந்தேன் போற்றி
 காவாய் கனகத் திரளே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 9 | 
| நெடிய விசும்பொடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றி
 அடியும் முடியும் இகலி போற்றி
 அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
 கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
 கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
 கடிய உருமொடு மின்னே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 10 | 
| உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
 எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
 இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
 பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
 பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
 கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 11 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.56 திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம் | 
| பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி பூதப் படையாள் புனிதா போற்றி
 நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
 நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
 மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
 வானோர் வணங்கப் படுவாய் போற்றி
 கறையுடைய கண்ட முடையாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 1 | 
| முன்பாகி நின்ற முதலே போற்றி மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
 அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
 ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
 என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி
 என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
 கண்பாவி நின்ற கனலே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 2 | 
| மாலை யெழுந்த மதியே போற்றி மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
 மேலை வினைக ளறுப்பாய் போற்றி
 மேலாடு திங்கள் முடியாய் போற்றி
 ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
 அடியார்கட் காரமுத மானாய் போற்றி
 காலை முளைத்த கதிரே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 3 | 
| உடலின் வினைக ளறுப்பாய் போற்றி ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
 படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
 பல்கணக் கூத்துப் பிரானே போற்றி
 சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
 தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
 கடலி லொளியாய முத்தே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 4 | 
| மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
 பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
 போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
 மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
 மிக்கார்ள ளேத்தும் விளக்கே போற்றி
 கைசேர் அனலேந்தி யாடீ போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 5 | 
| ஆறேறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
 நீறேறு மேனி யுடையாய் போற்றி
 நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
 கூறேறு மங்கை மழுவா போற்றி
 கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
 காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 6 | 
| அண்டமே ழன்று கடந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
 பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
 பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
 தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
 தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
 கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 7 | 
| பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
 உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி
 ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
 அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
 ஆரு மிகழப் படாதாய் போற்றி
 கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 8 | 
| செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி தேடி யுணராமை நின்றாய் போற்றி
 பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
 பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
 மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
 மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
 கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 9 | 
| மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
 சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
 சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
 கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று
 கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
 காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.57 திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம் | 
| பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றி
 சூட்டான திங்கள் முடியாய் போற்றி
 தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
 ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி
 அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
 காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 1 | 
| அதிரா வினைக ளறுப்பாய் போற்றி ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
 சதுரா சதுரக் குழையாய் போற்றி
 சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி
 எதிரா உலக மமைப்பாய் போற்றி
 என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
 கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 2 | 
| செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வ முடையாய் போற்றி
 ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
 ஆகாச வண்ண முடியாய் போற்றி
 வெய்யாய் தணியா யணியாய் போற்றி
 வேளாத வேள்வி யுடையாய் போற்றி
 கையார் தழலார் விடங்கா போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 3 | 
| ஆட்சி யுலகை யுடையாய் போற்றி அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
 சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
 சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
 மாட்சி பெரிது முடையாய் போற்றி
 மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
 காட்சி பெரிது மரியாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 4 | 
| முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி யுடையாய் போற்றி
 என்னியா யெந்தை பிரானே போற்றி
 ஏழி னிசையே யுகப்பாய் போற்றி
 மன்னிய மங்கை மணாளா போற்றி
 மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
 கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 5 | 
| உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
 எரியாய தெய்வச் சுடரே போற்றி
 ஏசுமா முண்டி யுடையாய் போற்றி
 அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி
 அறிவே அடக்க முடையாய் போற்றி
 கரியானுக் கழியான் றீந்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 6 | 
| எண்மேலும் எண்ண முடையாய் போற்றி ஏற்றிய வேறுங் குணத்தாய் போற்றி
 பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
 பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
 விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
 மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
 கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 7 | 
| முடியார் சடையின் மதியாய் போற்றி முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
 துடியா ரிiயுமையாள் பங்கா போற்றி
 சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
 அடியா ரடிமை அறிவாய் போற்றி
 அமரர் பதியாள வைத்தாய் போற்றி
 கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 8 | 
| போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
 ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
 எண்ணா யிரநூறு பேராய் போற்றி
 நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
 நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
 காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி.
 
 | 9 | 
| இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று. 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |